நான் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது மிகவும் உண்மையாகும். என்ன தான் பொருட்செல்வம் இருந்தாலும், கல்வி இருந்தாலும் நோயின்றி வாழ்வதே உண்மையான வாழ்க்கை. நோய்களில் மிகவும் கொடியது சிறு குழந்தையில் ஆரம்பித்து பெரியவர் வரை ஆட்டி படைக்கும் நோய் புற்றுநோய்தான். இது வருவதும் தெரியாது, வந்தால் அதை எதிர்கொள்வதற்கு  ஒரு பெரிய மன தைரியம் வேண்டும்,

அந்த வகையில், இந்த புற்றுநோயாளிகளுக்கு தேவை அன்பும் சிறந்த சிகிச்சையும் மட்டுமே.  அதை 25 வருடங்களாக சிறந்த முறையில் செய்து வருகிறார், அஸ்வின் மருத்துவமனை நிறுவனர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தங்கவேலு. அவர் தி கோவை மெயிலுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தில்தான். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உருவான கனவுதான் இந்த டாக்டர் கனவு. பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த நண்பர்களுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர்கள் நன்றாக படித்ததால் அவர்களுடன் போட்டி போட்டு நானும் படித்தேன். அடிப்படையில் நான் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன்.

என் நண்பர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு செல்வர். என்னிடம் போதுமான பணம் இல்லை. அப்போது என் நண்பர்களின் பெற்றோர், நீ படி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி உற்சாகப்படுத்தினர். என்னுடைய டாக்டர் கனவை மனதில் வைத்துக் கொண்டு, விடா முயற்சி, கடின உழைப்பு, படிப்பில் ஆர்வம் கொண்டு படித்து பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை பார்த்து ஆசிரியர்கள் பெரிதும் ஊக்குவித்தார்கள், ஒரு கட்டத்தில் அவர்களின் செல்லப்பிள்ளையாக மாறினேன். என்னுடைய நண்பனின் டாக்டர் கனவுதான் என்னையும் டாக்டர் ஆக மாற்றியது. தமிழ் வழி கல்வியில் படித்த நான் பியூசி சேரும்பொழுது படிக்க திணறினேன். கூட படிக்கும் அனைவரும் ஆங்கில புலமை அதிகம் பெற்று இருந்தார்கள். எனக்கோ தாழ்வு மனப்பான்மை வேறு.

அதை உடைக்க மிக கடினமாக படித்து கல்லூரியில் 2ஆம் இடத்தை பிடித்தேன், பியூசி ரிசல்ட் முடிவிற்காக காத்திருந்த சமயத்தில் என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்தேன். படித்தால் எம்பிபிஎஸ் இல்லையெனில் விவசாயம். மேற்கொண்டு படிக்க மாட்டேன். மற்ற எந்த துறை சார்ந்த படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க மாட்டேன் என்று என் முடிவில் தீவிரமாக இருந்தேன். எனது அப்பாவும், அப்பாவின் சக நண்பர்களும் என்னை மற்ற படிப்பிற்கு விண்ணப்பித்து வை, ஏதாவது ஒரு துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ளலாம் என அறிவுரை வழங்கினர்.

ஆனால் நான் மறுத்துவிட்டேன். தேர்வு முடிவும் வெளியானது. எனக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்தது. எனது கல்லூரி படிப்பை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். நான் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக என் அப்பா தவறி விட்டார், குடும்பத்தை சுமக்கும் பாரம் என் மேல் விழுந்தது, படிப்பதா? குடும்பத்தை பார்ப்பதா? என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்றேன்.

என் மனதில் திடீரென்று ஒரு யோசனை, இரண்டு இன்லாண்ட்  கவர் வாங்கி அதில் ஒன்று பழனி முருகனுக்கு எழுதினேன், 10 வது நாளில் பழனி மலையில் இருந்து பிரசாதம் என் வீட்டு முகவரிக்கு வந்தது.

இன்னொரு கடிதம் யாருக்கு எழுதினேன் என்று தெரிய வேண்டாமா? பாரத பிரதமர் இந்திரா காந்திக்கு. என் குடும்ப சூழ்நிலையும் என்னுடய படிப்பை தொடர உதவுமாறும் கடிதம் எழுதினேன். சில நாட்களில் வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்க என்னை தேடி வந்தார்கள். 1973 ம் ஆண்டு 3500 ரூபாயில் என் படிப்பை முடித்தேன். பிறகு இரவு பகல் பாராமல் உழைத்து என் படிப்பு கடனை அடைத்தேன்…

என் மருத்துவ படிப்பை முடித்தவுடன் என் சொந்த ஊரான கெம்மநாயக்கன்பட்டியில் 1976 இல் ஒரு கிளினிக் உருவாக்கி என்னுடைய மருத்துவ வேலையை தொடங்கினேன். காரணம் அப்பகுதியில்  மலைவாழ் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை. பிறகு சிறிய கிராமங்களில் கிளினிக் ஆரம்பித்தேன். மேற்கொண்டு முதுகலை பட்டப்படிப்பும் முடித்து சத்தியமங்கலத்தில் என் மருத்துவ வேலையை தொடர்ந்து செய்தேன்.

அதனை தொடர்ந்து 1991 ல் அஸ்வின் மருத்துவமனையை துவங்கினேன். 1992 இல் எனது அப்பாவின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினேன். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், குறைவான கட்டணத்தில் தரமான கல்வி, குறைவான கட்டணத்தில் மருத்துவ சேவை மற்றும் சுகாதார பராமரிப்பு. மேலும் அந்த காலத்தில் புற்று நோயை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கிடையாது. அதனால் 1992 ல் இந்த அறக்கட்டளை மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

பள்ளி, கல்லூரி, முக்கியமாக பெண்கள் கல்லூரியில் அதிக விழிப்புணர்வு கொடுத்தோம். காரணம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் , கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் வருகின்றன. இதை வெளியில் கூற பல பெண்களுக்கு தயக்கம். அதோடு ஒரு பெண்ணுக்கு சொல்லும் போது அவளின் குடும்பத்துக்கே சொன்னது போல ஆகும்.

தொடர்ந்து 25  வருடங்களாக மக்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அஸ்வின் மருத்துவமனை சிறந்த சிகிச்சைக்கு மட்டும் பேர் போனதல்ல, ரேடியேஷன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் மனநிலையை புரிந்து மருத்துவமனையில் 45 இலவச படுக்கைகள் அவர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

என்னுடைய இந்த மருத்துவ சேவைக்காக ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவர் விருது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பொழுது விளையாட்டுத் துறையில் அத்லெடிக் அசோசியேசன் தலைவராக இருக்கிறேன். ஆனால் எப்பொழுதும் மருத்துவ சேவையில் எனக்குள்ள ஈடுபாடு என்றும் குறையாது.

என்னை வளர்த்த என் கிராமத்தில், எனது 200 நண்பர்களோடு இணைந்து பாரதியார் சாந்தி என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று நடத்தி வருகிறோம். 300க்கும் மேற்பட்டோர் அங்கு வசிக்கின்றனர். என்னுடைய கிராமத்தில் நான் தான் முதல் மருத்துவர் என்பது பெருமையாக உள்ளது. எனக்கு பிறகு ஒரு மருத்துவர் உருவாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் தேவைப்பட்டது. இதை நான் சொல்லக் காரணம், ஜெயிக்கும் வேண்டும் என்றால் நம்முடைய இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விடாமுயற்சி, இலக்கை அடைவதை மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும், உங்கள் இலக்கை அடைய இடையில் பல தடைகள் வந்தாலும் திசைமாறாமல் வெற்றியின் திசையை நோக்கிச்செல்ல வேண்டும். இலக்குகள் தெளிவாக இருந்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும், என்னுடைய இலக்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே தீர்மானம் செய்தேன். வாழ்க்கையில் கஷ்டங்கள் பல வந்தாலும், கஷ்டத்தை மட்டுமே யோசித்தால் நம் வாழ்க்கையில் என்றும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது. உங்களது குறைகளை எப்பொழுது நிறைகளாக  மாற்றுகிறீர்களோ அப்பொழுதுதான் முன்னேற முடியும்.

வாழ்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் வெற்றி அடையும் பொழுது அந்த சந்தோசத்தை கூற வார்த்தையில் விவரிக்க இயலாது , அனுபவித்தால் மட்டுமே முடியும்.

எதிர்காலத்தில் அஸ்வின் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரவழைக்கப்பட்டு இந்திய அளவில் ஒருசிறந்த புற்றுநோய் மையமாக விளங்கும் என்றும் பிபிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப்  டெக்னாலஜி மிக பெரிய பல்கலைகழகமாக மாற்றுவதற்கு எங்களது கடின உழைப்பை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம் என்றார்.

 விருதுகள் மற்றும் பதவிகள்

  • ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவர் விருது.
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம்.
  • 2000 ஆம் ஆண்டில் President of Indian Medical Association in Coimbatore Branch.
  • 2013 ஆம் ஆண்டில் President of Tamil Nadu in India Level.
  • 2015 ஆம் ஆண்டில் – National Wise  President of Medical Association.
  • Academic அளவில் Wise President of Indian Association of  Gastrointestinal, மற்றும் Athletic Association இல் president ஆக தேர்வாகி இருக்கிறார்.

– ஆசிரியர் குழு.